Home » » வெள்ளை வானின் கறுப்புப் பக்கங்கள்!

வெள்ளை வானின் கறுப்புப் பக்கங்கள்!

Written By Freedam to the nation resettlement of IDPs on Wednesday, November 13, 2013 | 7:28 PM


[ வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013, 02:56.00 AM GMT ] [ விகடன் ]
போராளிகளையும் தமிழர்களையும் மட்டுமா... இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் எந்த நபரையும் அள்ளிச் செல்கிறது வெள்ளை வான். அப்படிக் கடத்திச் செல்லப்பட்டவர்கள், கருகிய பிணமாகவோ, அழுகிய சடலமாகவோ காணக் கிடைப்பார்கள்.
அல்லது காணாமல் போனவராகவோ, காற்றில் கரைந்தவராகவோ மட்டுமே நினைவில் இருப்பார்கள். இப்படி நடந்த நடுக்கமூட்டும் கொடூரங்களைப் பதிவுசெய்துள்ளது லீனா மணிமேகலை இயக்கியுள்ள 'வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ என்ற ஆவணப்படம்!
மகனைப் பறிகொடுத்த ஒரு தாய், கணவரை இழந்து தவிக்கும் ஒரு முஸ்லிம் மனைவி, முன்னாள் போராளியான ஒரு பெண் புலி, தந்தையைப் பறிகொடுத்த ஒரு மீனவச் சிறுமி என, ஏழு பேரின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம், பல சமயங்களில் மனதைக் கனக்கச் செய்கிறது.
குத்தி வெளியில் எடுக்கப்பட்ட குடல், இரத்தம் சிதறி உருக்குலைந்த பிணம், மார்புகள் அறுக்கப் பட்ட பெண் போராளி, உடலில் இருந்து தனியாகத் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை... என்று கோரக் காட்சிகள் எதுவும் வெள்ளை வான் கதையில் இல்லை.
ஆனால், அவற்றைப் பார்த்து இன்றைய இலங்கையை நாம் உணர்ந்து கொள்வதைவிட வெள்ளை வான் கதை மூலம் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ளலாம்.
மேலும், இலங்கையில் ஒரு மனிதனின் ஒருநாள் பொழுது, எத்தனை துயரம் மிக்கதாக... எத்தனை பதற்றம் நிறைந்ததாகக் கழிகிறது என்பதை மிக முக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறது.
இலங்கையில் எல்லோரும் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சியால் எங்களுக்கு வரவில்லை. இங்கு அழுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அதனால் சிரிக்கிறோம்!’ - இந்த ஆவணப்படத்தில் சிங்கள கார்ட்டூனிஸ்ட் பிரகீத்தின் மனைவி உதிர்த்திருக்கும் வேதனை வார்த்தைகள் இவை.
வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ ஆவணப்படத்தை, இலங்கை அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆவணமாகக் கொண்டுவந்திருக்கிற லீனா மணிமேகலையிடம் பேசினேன்.
90-களில் இருந்து 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளாக இருந்தவர்களும் இல்லாதவர்களுமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல்போனார்கள். அந்த வகையில் கணவனை இழந்த, மகனை - மகளை இழந்த, சகோதரர்களை இழந்த, தந்தையை இழந்த, நண்பர்களை இழந்த உறவுகளின் போராட்டங்களும் கண்ணீரும்தான் 'வெள்ளை வான் கதைகள்’.
முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு போரின் பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது, இலங்கையில் அரசாங்கத்தால் களையப்படுகிறார்கள். உலக அரங்கில் ஈராக்குக்கு அடுத்ததாக காணாமல்போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
சேட்டிலைட் பிம்பங்களாகப் பார்த்தும் பத்திரிகைச் செய்திகளாகப் படித்தும் நாம் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையை, அந்த வலியுடன் உள்வாங்கும் போது பித்துப்பிடிக்கும்; ஆன்மா அலறும்; நெஞ்சு எரியும். அதை அப்படியே மடைமாற்றம் செய்யும் முயற்சியே இந்த ஆவணப்படம்!
இந்தப் படத்துக்காக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்று களப்பணி ஆற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
எதுவும் முயற்சித்தால் நடக்கும் நண்பா! வாய் நிறைய உணர்ச்சி பொங்கப் பேசும் பலர், ஒரு புல்லைக்கூட பிடுங்கிப் போடுவது இல்லை. போர் முடிவற்ற பிறகும், மக்கள் மனதில் ஒருவித கிலியைப் பீடிக்க வைத்திருப்பதில் ராஜபக்ச அரசாங்கம் முனைப்பாக உள்ளது.
அரை மைலுக்கு ஒரு இராணுவ செக்போஸ்ட். ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகிறது. 'கொலை செய்யப்படுவீர்கள், மானபங்கப்படுத்தப்படுவீர்கள், கைது செய்யப்படுவீர்கள், காணாமல் போகடிக்கப்படுவீர்கள்’ என்று என்னைப் பல வகைகளில் எச்சரித்தனர்.
ஆனால், ஒரு கலைஞியின் குணம் பணிவது அல்ல; மீறுவது. நான் மீறினேன்!
நானும், ஒளிப்பதிவாளர் தம்பி அரவிந்தும் தான் படக்குழு. டவுன் பஸ்ஸில் பயணம் செய்து, கிடைக்கும் இடங்களில் தங்கி, சர்ச்சிலும் கோயிலிலும் சாலையிலும் தூங்கி, 'படம் எடுக்கிறோம்’ என்ற எந்தச் சலசலப்புகளும் இல்லாமல் எடுத்த படம் இது. இலங்கையின் ஜெஸ்யூட் பாதிரிமார்களும், மனித உரிமைப் போராளிகளும், எழுத்தாளத் தோழர்களும் எங்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்து அரவணைத்தார்கள்.
படத்தில் பேசிய ஒரு பெண் போராளி, 'உங்களிடம் கதைத்தற்காக நான் கடத்தப்படலாம்’ என்று ஒரு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இவ்வளவு அழிவைப் பார்த்துவிட்டேன். இனி என்ன நான் பார்க்கவேண்டி இருக்கிறது. இந்த வாக்குமூலத்தை அளிப்பது எனது வரலாற்றுக் கடமை’ என்று அறிவித்தே, அவர் இந்தப் படத்தில் பங்குகொண்டார்.
அவர் இழந்த ஒரு கண்ணையும் கையையும் தடவிப் பார்த்த போது, சத்தியத்தைத் தடவிப் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தச் சத்தியத்துக்காகவே அவர் வாழ்ந்து தீர்ப்பார்.
அவரைப் போலவே மற்றவர்களும் தாங்கள் இழப்பதற்கு வேறொன்றும் இல்லை என்ற மனநிலையில்தான், தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் நாடு கேட்கவில்லை, தங்கள் கண் முன்னே 'விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட, இராணுவத்திடம் சரண் அடைந்த உறவுகள் எங்கே?’ என்றுதான் கேட்கிறார்கள்.
அந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!
உங்களின் ஒவ்வொரு முயற்சியும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பில் அக்கறை செலுத்துவதைவிடவும், பொருளாதாரரீதியில் உங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான முனைப்பாக இருக்கிறது என்ற விமர்சனம் குறித்து!?
என் ஏ.டி.எம். அட்டையைத் தருகிறேன், கடவுச்சொல்லையும் தருகிறேன். நீங்களே சோதித்துப் பாருங்கள். ஒரு பத்திரிகையாளராக நீங்கள் வாங்கும் மாதச் சம்பளத் தொகைகூட என் கணக்கில் இருக்காது.
அப்புறம் என்ன கேட்டீர்கள்... பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பா? அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். நான் ஒரு கதை சொல்லியாக என்னைப் பாதிக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!
அடிப்படைவாதிகள், இடதுசாரிகள், பகுத்தறிவுவாதிகள்... என, அனைத்துத் தரப்பினரும் உங்களை எதிர்க்கவோ விமர்சிக்கவோ செய்கிறார்கள். உங்களின் நிலைப்பாடுதான் என்ன?
நான் எந்தக் கருத்தியலுக்கும் அடிபணியாத படைப்பாளி, கலைஞி, சுதந்திரமான மனுஷி. இதை எந்தப் பிரிவினரால்தான் தாங்க முடியும்... சொல்லுங்கள்?
Share this article :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Freedom to the Nation - Resettlement of IDP - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger